தேடுவாய் நீ
மானிடா !
எதைத் தேடுகிறாய் -அதுவும்
எங்கே தேடுகிறாய்?
எங்கிருந்து வந்தேன்
எங்கே செல்வேன்-தெரிந்து
என்ன பயன்-அதற்காய்
அலைவதற்கா இந்த மானிட பிறப்பு.
இல்லாத ஊருக்கு
செல்லாத வண்டியை-செலுத்த
நினைத்து மனித
ஏனிந்த ஓட்டம் !
கண்ணுக்குள் வலையை கட்டி
கனவுலகில் வாழ்கிறாய்.
அமாவாசையில் பௌர்ணமி தேடி
ஆடி அலைகிறாய் !
கட்டிலிலும் கரன்சியிலும்
புரள்வதால் மட்டும்
நிறைந்து விடுமா?
இந்த மானிட வாழ்க்கை.
இந்த பூமிக் கல்லறையில்
மண்ணுக்கும் மதுவுக்கும்
பொன்னுக்கும் பெண்ணுக்கும்
கேடாய் அலைந்தான் என்றா
உன் சரித்திரம்
நாளை சொல்லப்பட வேண்டும்.
கடவுளைத் தேடி
கன தூரம் ஓடுகின்றாய்
காசைக் கொடுத்து
கணக்காய் திரும்புகின்றாய்
படைப்பவன் பிரம்மன்
எனில்-உனைப்
படைத்தவள் தாய் தானே?
நினைவில் கொள்ள
நீ மறந்ததால் தானே
"முதியோர் இல்லங்கள்"
உனக்கு முன்னே
ஓராயிரம் இன்பங்கள்-நீ
உணர்ந்து கொண்டுள்ளாயா?
கரன்சிக்காக வீணாக்கும்
காலத்தையும்,இளமையையும்
கணக்கெடுத்துப் பார்
கதை புரியும் உனக்கு.
வாழ்க்கையோடு வாழாமல்
வாழ்க்கையை
வா.ழ்.ந்.து....பார்
வலி தெரியும்
வாலிபம் புரியும்
வானமும் உனக்கு வசப்படும்
அன்பைத் தேடு
அரவணைத்து வாழ்
இயற்கையை பூசி
தாயை நேசி
இன்புற்று வாழ்வாய்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment